
ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு சுமார் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இந்த முறை உலகில் தனது முத்திரையை வலுவாகப் படைத்த தொழில்நுட்பமான ஆண்ட்ராய்டின் செயலியை உருவாக்கும் பயிற்சியை வழங்க முடிவு செய்தது.
இதற்கான முயற்சியை கடந்த இரண்டு மாதங்களாக விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு மேற்கொண்டது, இந்த பயிற்சியில் இணைய விண்ணப்பிப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது, அதில் சுமார் 400 முதல் 500 மாணவர்கள் முன்பதிவு செய்திருந்தனர் அதில் 40 மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை பொருளாதார மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மற்றும் ஆர்வம் மிகுந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது

பயிற்சியின் தொடக்க விழாவினை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது, தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் திரு ஜெ ஜெயச்சந்திரன் பங்கேற்றார்.

விழாவினை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரிப்பிரியா தொகுத்து வழங்கினார்,விழாவின் தொடக்க உரையாக விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு எதற்காக இந்த பயிற்சியை தொடங்கியது எவ்வாறு மாணவர்கள் இதன் மூலமாக பலனடைய போகின்றனர் என்பது குறித்தும் இந்த அமைப்பில் இருக்கும் அனைவரும் உங்களைப் போலவே பயிற்சி பெற்று பலனடைந்து இன்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்துளளனர் அவர்களைப் போன்று நீங்களும் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு கார்க்கி பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

அதன் பிறகு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திரு ஜெ ஜெயச்சந்திரன் தொழில்நுட்பத்தின் அடிப்படை தேவை மற்றும் அத்தியாவசியத்தை புரிந்துகொண்டு சமூக சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் மற்றும் உருவாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடக்கும் பணம் பறிப்பு முதலிய குற்றங்களில் எளிய மக்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த அடிப்படை விழிப்புணர்வு இல்லாத மக்கள் எவ்வாறு சிக்குகின்றனர் என்பது குறித்து விளக்கினார்

அதன்பிறகு பயிற்சியாளர் ஆகிய திரு கலீல் ஜாகீர் Flutter குறித்த முன்னுரையை வழங்கினார் அதன்பின் இந்த பயிற்சியில் கற்றுக் கொண்டு இருக்கும்பொழுதே சமூகத்திற்கு தேவையான செயலிகளை உருவாக்குவது குறித்த மனநிலையை உருவாக்கினார்

2 thoughts on “இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021”